இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியான ‘அங்காடித் தெரு‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மகேஷ்.
இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அஞ்சலிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
தற்போது வரை சினிமாவில் ஒரு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி. ஆனால் அதே படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஷ் அதன் பிறகு சில படங்கள் நடித்தும் அடுத்த கட்டததிற்கு செல்லவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ஈட்டி, சுந்தரபாண்டியன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை தவறவிட்டேன். ‘அங்காடித் தெரு‘ படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்ய வேண்டும்? என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை.
அதனாலேயே இது போன்ற படங்களை தவறவிட்டு என் சினிமா வாழ்க்கை வீணாகி விட்டது“ என்று வருத்ததோடு தெரிவித்துள்ளார்.










