ஒருமுறை மட்டுமே சார்ஜ் செய்யப்பட்ட சோலார் எலெக்ட்ரிக் கார், சுமார் 12 மணி நேரத்தில் 1,000 கி.மீ தூரம் பயணித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலையை சேர்ந்த மாணவர்கள் ‘சன்ஸ்விப்ட் 7’ என்ற பெயரில் சூரிய மின் சக்தி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் காரை தயாரித்தனர். 500 கிலோ எடை கொண்ட அந்த சோலார் கார், மணிக்கு 85 கிமீ வேகத்தில் 11.52 மணி நேரத்தில் 1,000 கி.மீ தூரத்தை அடைந்தது. இதன் மூலம் ஒரே சார்ஜில் 1000 கி.மீ தூரத்தை கடந்த வேகமான எலெக்ட்ரிக் கார் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சாதனை பயணத்தில் சிட்னியில் இருந்து மெல்போர்ன் வரை உள்ள தூரத்தை விட அதிக தூரம் சென்றுள்ளது. டிரைவரை மாற்றுதற்கு மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் காரை நிறுத்தியுள்ளனர். மேலும், ஒருமுறை டயர் பஞ்சர், பேட்டரி பிரச்னையால் மட்டுமே நின்றுள்ளது. 100 கி.மீ பயணத்தில் 3.8 கிலோ வாட் மட்டுமே மின்சாரம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள எலெக்ட்ரிக் கார்களில், 100 கி.மீ தூரம் பயணத்துக்கு 15 கிலோ வாட் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.










