சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செயல்பட்டு வரக்கூடிய கடைகளில் சுகாதாரமற்ற, தரமற்ற முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகார் வந்ததை அடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பேக்கரி, டீக்கடை ஹோட்டல்,தள்ளுவண்டி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில், தேவகோட்டை, சிவகங்கை, கண்ணங்குடி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பேக்கரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த காலாவதியான குளிர்பானங்கள், பிரட், பன், உடம்புக்கு கேடு விளைவிக்கும் கலர் அதிகம் சேர்த்த மிட்டாய்கள், கார வகைகள் மற்றும் உணவகத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த புரோட்டா, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் சூப்பர் மார்க்கெட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ரசாயனம் கூடுதலாக சேர்த்த அச்சு வெள்ளம் உள்ளிட்டனவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரியாணி கடையில் முதல் நாள் வேக வைத்த கிரில் சிக்கன், மறுநாள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடை உரிமையாளர்களுக்கு சாப்பிட உகந்ததல்ல சான்றிதழ் வழங்கி 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த அதிரடி சோதனையின் போது, மொத்தமாக சுமார் 400 கிலோ தரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.







