எல்லாத் துறைகளும் அசூர வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் ஒட்டுமொத்த உலகத்தையுமே, அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடும் அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். அதாவது கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் எந்தவொரு நாட்டையும் விட்டுவைக்கவில்லை. பல லட்சம் மக்களைக் காவு கொண்ட கொரோனாவின் பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், மீண்டும் சீனாவில் அதிவேகமாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிவிட்ட செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, சீனா, அமெரிகா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நாடுகளின் தற்போதைய நிலவரம், மற்றும் உள்நாட்டு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், தடுப்பூசிகள் தேவையான அளவு கையிருப்பு இருப்பதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்து இருக்க கூடிய உத்தரவுகள் குறித்து, பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, மக்கள் அனைவரும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கவனத்துடன் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். பண்டிகை காலங்கள் நெருங்குவதால் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக முதியவர்கள், உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அனைத்து மாநில மக்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரிசோதனை, மரபணு மாற்றத்தை கண்டறியும் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான், உருமாற்றம் அடைந்த வைரஸ் நம் நாட்டுக்குள் ஊடுருவி இருந்தால் அதை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை செய்ய முடியும். தற்போதைய நிலையில் கொரோனா பரவல் முடிவுக்கு வரவில்லை. அலட்சிய மனோபாவத்தை கைவிட்டுவிட்டு, கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக விமான நிலையங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை முறைகள், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனை கட்டமைப்பு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், செயற்கை சுவாச கருவிகள், பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். என உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.










