அர்ஜென்டினா அணி, 36 ஆண்டுகளுக்கு பிறகு, கால்பந்து போட்டியில், 3வது முறையாக, வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அரபு நாடான கத்தாரில், 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20ம் ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் ஓரங்கட்டப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால் இறுதியில் கழன்று சென்றது.
லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா ஆகிய வீரர்கள் இறுதிப்போட்டியில் களம் இறங்கினர். இந்த வேளையில், உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடந்தது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் 2 அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால், மைதானத்தில் அனல் பறந்தது.
அதில் பிரான்ஸ் வீரர் பாக்சில், அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதனையடுத்து ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றி அசத்தினார். இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. அதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அடுத்து தொடங்கிய 2வது பாதியில் 2 அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. தொடர்ந்து நடந்த அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81வது நிமிடங்களில் தனது அணிக்காக அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார். இதனை பிரான்ஸ் அணி வீரர்கள் கொண்டாடினர். போட்டி சமன் ஆனதால் ஆட்டத்தில் கடும் சவால் ஏற்பட்டது.
2 அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில்,அர்ஜென்டினா வீரர்களான டி மரியா (1), மெஸ்சி (2), பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (3) என்ற கணக்கில் கோல் அடிக்க 3-3 என 2 அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இதையடுத்து, அர்ஜென்டினாவுக்கு ரூ.342 கோடியும், 2-வது இடத்தை பிடித்த பிரான்சுக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.
அர்ஜென்டினா அணி, 36 ஆண்டுகளுக்கு பிறகு, கால்பந்து போட்டியில், 3வது முறையாக, வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், உலக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.








