வழக்கம்போல் இரவு வேளையில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில், வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், உடல் கருகி பரிதாபமாக உயிரை விட்டிருக்க கூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட கொலை முயற்சியாக இருக்குமா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், மன்சிரியாலா மாவட்டம் மண்டமர்ரி அடுத்த குடிப்பள்ளி வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவய்யா (50). இவரது மனைவி பத்மா (45). இவர்களது உறவினர் சாந்தய்யா (50). பத்மாவின் அண்ணன் மகள் மவுனிகா (23), அவரது 3 வயது மகள், ஹிமாபிந்து மற்றும் ஸ்வீட்டி. சாந்தய்யா சிங்கரேணி நிலக்கரி தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தய்யா, கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மீண்டும் குடும்பத்தினர் ஒன்றாக சேர வேண்டும் என பலமுறை பேச்சு வார்த்தை நடந்தது. இதுதொடர்பாக 17.12.2022 அன்று உறவினர்கள், சாந்தய்யாவை பார்க்க சென்றனர். அனைவரும் பேசி முடித்தபின்னர், இரவு தூங்க சென்றனர்.
நள்ளிரவில் திடீரென வீட்டில் தீப்பற்றியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், வெளியே வர முயற்சித்தனர். ஆனால், தீ வேகமாக பரவி, கொழுந்துவிட்டு எரிந்ததால், அவர்களால் முடியவில்லை. இதில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
சாந்தய்யா குடும்பத்தினருக்கும், சிவய்யா குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால், இந்த தீ விபத்தில் சாந்தய்யா குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.










