இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்‘. முதலில் இப்படத்தில் நாயகனாக நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியிருந்தார். மேலும் இப்படத்தை தயாரித்தும் வந்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தும் வந்தார். இந்நிலையில் சில பிரச்சனைகளால் சூர்யா இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் தற்போது சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் இயக்குனர் பாலா. இப்படத்திற்காக கேரளாவில் இருந்து சில துணை நடிகைகளை அழைத்து வந்துள்ளார் ஜிதின் என்கிற ஒருங்கிணைப்பாளர்.
அதில் துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் “வணங்கான் படத்தில் 3 நாட்கள் நடிக்க மொத்தமாக 22ஆயிரத்து 600 ரூபாய் பேசினார்கள். ஆனால் சொன்னபடி அந்த தொகையை கொடுக்கவில்லை என்றும், அதை எதிர்த்து கேட்டதற்கு அடித்து உதைக்கிறார்கள்“ என புகார் தெரிவித்துள்ளார்.










