நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்டம் ‘பத்து தல‘. இந்த படத்தை இயக்குனர் ஒப்பிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘பத்து தல‘. மேலும் சிம்புவை தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து டிஜே அருணாச்சலம், கௌதம் மேனன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். மார்ச் 30-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவருடைய மகன் அமீன் பாடியுள்ள பிரமோஷன் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இப்படத்தின் டீசருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது ‘பத்து தல‘ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. மேலும் இந்த தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.










