சென்னை துறைமுகம்- புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் சேவைத் தொடங்கியுள்ளது.
சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி இடையே சரக்குகள் ஏற்றிச் செல்லும் கப்பல் சேவைத் தொடங்கியுள்ளது. குளோபல் லாஜிஸ்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த ‘HOPE SEVEN’ என்னும் கப்பல் மூலம் வாரத்தில் இருமுறை புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே சரக்குகள் ஏற்றிச் செல்லப்படும்.
ஒரு கண்டெய்னரில் 14 டன் முதல் அதிகபட்சம் 20 டன் வரை என ஒரு சமயத்தில் 106 கண்டெய்னர்கள் வரை கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இதனால் சரக்கு கையாளும் திறன் 600 TEU அளவிற்கு அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
சாலை வழியே சென்றால் குறைந்த கண்டெய்னர்களே ஏற்றிச் செல்லப்படும் நிலையில், கப்பலில் 106 கண்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும். இதேபோல், சாலை வழியே சென்றால் 30,000 ரூபாய் செலவாகும் நிலையில், கப்பலில் 23,000 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழியே சென்றால் சுமார் 30 மணி நேரம் ஆகும். கப்பல் மூலம் 12 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காற்று மாசுப்பாட்டைக் குறைக்கவும் இந்த திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.










