ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது ‘டீசல், எல்.ஜி.எம்‘ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று தனது புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்த படத்துக்கு ‘பார்க்கிங்‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண்க்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறும்போது, “ இது திரில்லர் ட்ராமா கதையை கொண்ட படம். கார் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் ‘பார்க்கிங்‘ பிரச்சனையை சந்திப்பார்கள். அதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

பார்ப்பதற்குச் சிறு மோதலாகத் தெரியும் பார்க்கிங் விவகாரம் என்ன மாதிரியான சிக்கலுக்கு கொண்டு செல்கிறது என்று கதைப் போகும். ஹரிஷ் கல்யாண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறார். இந்துஜா, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். சென்னையில் நடக்கும் கதை இது. கார் வைத்திருக்கும் அனைவரும் தங்களை கதையோடு பொருத்திக் கொள்ள முடியும் “ என்று கூறியுள்ளார். மேலும், இதன் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்