வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
மாதந்தோறும் விலையை மாற்றிக் கொள்ள ஏதுவாக எரிவாயு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் இருந்த சூழலில் இந்த மாதம் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 14.2 கிலோ எடைக் கொண்ட இன்டேன் சிலிண்டரின் விலை ரூபாய் 1,068- ல் இருந்து ரூபாய் 1,118 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
“40 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 24- க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விற்கப்படுகிறது. நடுத்தர, ஏழை, எளிய மக்களால் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை. தற்போது வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை உயர்த்தியது அதிர்ச்சி அளிக்கிறது” என்று பொதுமக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.










