தளபதி விஜய்யை நேரில் பார்க்க வேண்டுமென்று அவருடைய வீடு வரை சென்றும் பார்க்க முடியாததால் பள்ளி மாணவி ஒருவர், தளபதியின் வீட்டு வாசல் முன்பு கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்க்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய்யின் சூட்டிங் மற்றும் ஆடியோ லஞ்ச் போன்ற நிகழ்ச்சிகள் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் நடக்கிறது என்று தெரிந்தாலே தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடி விடுவார்கள். பொதுவாக தளபதியின் ரசிகர்கள் அனைவருமே அவரை நேரில் சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. இந்த கனவு சில ரசிகர்களுக்கு நிஜமானாலும், பல ரசிகர்களால் அவரை சந்திக்க முடிவதில்லை.
அந்த வகையில் தற்போது தமிழ்ச்செல்வி என்கிற பதினோராம் வகுப்பு மாணவி, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தன்னுடைய பெற்றோருடன் சுற்றுலா வந்த நிலையில், தளபதி விஜய்யை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் இல்லாததால், கேட் பூட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விஜய்யின் வீட்டு முன்பு, கைகூப்பி வாசலில் விழுந்து கும்பிட்டு, உங்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. வீடு வரைக்கும் வந்துட்டேன், ஆனா உங்கள பார்க்க முடியல… என விஜய்யின் வீட்டு கேட்டை கட்டி பிடித்தது போல நின்று கண்ணீர் மல்க விஜய்யின் வீட்டு சிசிடிவி கேமரா முன்பு பேசி உள்ளது, அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.










