முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் அமைந்துள்ளது முனியாண்டி கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 88- வது ஆண்டாக பிப்ரவரி 24-ம் தேதி அன்று பிரியாணி திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி, பக்தர்கள் ஒரு வாரம் காப்புக் கட்டி விரதம் மேற்கொள்வர். இந்தாண்டு விழாவுக்காக, கடந்த வாரம் முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, தாங்கள் கொண்டு வந்த பாலை சாமிக்கு அபிஷேகம் செய்தனர். விழாவின் நிறைவாக, பக்தர்கள் முனியாண்டி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300- க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன.
பின்னர், இவற்றைக் கொண்டு பிரியாணி செய்து சாமிக்கு படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரியாணி அன்னதானம் சுடசுடப் பகிர்ந்தளிக்கப்பட்டது. விழாவில், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.










