சமீப காலமாக அரசியல் நாகரிகம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. அரசியல் மோதல்கள், நாடாளுமன்றத்திலேயே அரங்கேறி வருகிறது. அதுவும் அமளி, அடிதடி என்பதை தாண்டி, மண்டை உடைந்து மருத்துவமனை செல்லக் கூடிய சம்பவங்கள் கூட சில நாடுகளில் நடந்தேறி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இந்த வகையில்தான், நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நடந்த கலவரம், அடிதடி காரணங்களுக்காக, முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருவது டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் குடியரசுக் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்த டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்தார். மேலும், அந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிவந்தார்.
இதற்கிடையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு, சான்றிதழ் வழங்குவதற்காக 2021 ஜனவரி 6-ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்து நாடாளுமன்ற குழு விசாரித்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற குழுவின் விசாரணை முடிந்துவிட்டதாகவும், நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டுதல் உள்பட 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைக்க குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பபடுகிறது.
மேலும் அடுத்த வாரம் தனது முழு விசாரணை அறிக்கையை, நாடாளுமன்ற குழு வெளியிடும், அப்போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என அமெரிக்க ஊடகங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது.










