தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சசிகுமாரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘ஈசன்‘ படத்தை இயக்கிய நிலையில், இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி வந்தார் சசிகுமார். இவர் ‘நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படங்கள் அனைத்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி‘ திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது. இந்த நிலையில் ‘சுப்ரமணியபுரம்‘ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சசிகுமார் தான் மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது. சுப்பிரமணியபுரம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. நீங்கள் இந்த படத்தை கொண்டாடினீர்கள். இந்த முக்கியமான நாளில் நான் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளேன் என்பதை தெரிவிக்கிறேன் “ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.










