சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்‘ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் மடோன் அஸ்வின், “ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்தை திரையரங்குகளில் பார்க்கிறேன். ‘மண்டேலா‘ படத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தை சில நிகழ்வுகளை மையப்படுத்தி தான் எடுத்துள்ளோம். யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தோம். அரசியல் ரீதியாக இதுதான் கருத்து என எங்கேயும் திணித்து கூறவில்லை.
சென்னை கே.பி.பார்க் ஹவுஸிங் போர்டு பிரச்சினையை உதராணமாக வைத்துக் கொண்டேன். யாரையும் குறிப்பிட்டு படம் எடுக்கவில்லை. உதயநிதி படம் பார்த்துவிட்டு இரண்டு தம்ப்ஸ் அப் கொடுத்திருந்தார்.
அது மகிழ்ச்சியாக இருந்தது. இது சூப்பர் ஹீரோ படமில்லை. இது ஒரு ஃபேன்டஸி படம் தான். விஜய் சேதுபதி டப்பிங்கில் படம் பார்க்கும்போதே ரசித்து பார்த்தார்“ என்று கூறியுள்ளார். மேலும், “ ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு குரல் கேட்கும். நம்மை சுற்றி நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க வேண்டும் என நமக்குள் ஒலிக்கும் குரல் வெளியே வர வேண்டும் என்ற ஐடியாவாகத்தான் இதனை உருவாக்கினேன்“ என்றார்.










