‘மாமன்னன்‘ டிரைலரில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வடிவேலு

நடிகர் மற்றும் அமைச்சருமான உதயநிதி நடிப்பில் தற்போது ‘மாமன்னன்‘ படம் உருவாகியுள்ளது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாய் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உதயநிதி அமைச்சராகிவிட்டதால் இந்தப்படம் தான் அவரின் கடைசி படம் என அவரே கூறியிருந்தார். அதேசமயம் மூன்று ஆண்டுகளுக்கு பின் நடிக்கலாம் என்றும், அந்த படத்தையும் மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றது. இதில் உதயநிதியை விட வடிவேலு தான் பிரதானமாக உள்ளார். டிரைலரின் துவக்கம் முதல் இறுதி வரை வடிவேலு நிறைந்து காணப்படுகிறார்.

அரசியல்வாதியாக பகத் பாசில் நடித்துள்ளார். ஊரில் நடக்கும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக உதயநிதி மற்றும் வடிவேலு இருவரும் முன்னின்று குரல் கொடுப்பதும், அதனால் வரும் பிரச்சனைகளை சந்திப்பதும் தான் படத்தின் கதை என தெரிகிறது. மாரி செல்வராஜின் முந்தைய படங்களை போன்று இந்தப்படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும் என டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த டிரைலரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயமே வடிவேலு தான். இதுவரை காமெடியனாக பார்த்து வந்த வடிவேலுவை முதன்முறையாக ஒரு படத்தில் சீரியஸான ரோலில் பார்ப்பது வித்தியாசமாக இருப்பதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இம்மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 29-ல் படம் வெளியாகிறது என டிரைலரின் முடிவில் அறிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்