‘மாத்திரைகள் தான் என் உணவாக இருந்தது‘ – சமந்தா உருக்கமான பதிவு

தென்னிந்தியா சினிமா திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘சாகுந்தலம்‘ படம் பெரும் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் விஜய தேவரகொண்டா உடன் இணைந்து ‘குஷி‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் மயோசிடிஸ் என்ற நோயின் பாதிப்புக்கும் உள்ளானார்.

ஆனாலும், இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் திரைப்படங்கள், வெப் சீரியஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ‘சிட்டாடல்‘ வெப் சீரியலின் இந்தி பதிப்பில் ஒரு ஸ்பை வேடத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

இதற்காக தற்போது செர்பியா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு சர்ச்சுக்கு தான் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவு போட்டுள்ளார் சமந்தா. அதில், “மயோசிடிஸ் நோயினால் அவதிப்பட்டு வருவதால் கடந்த ஓராண்டில் எனது வாழ்க்கை பெரிய போராட்டக் களமாக மாறிவிட்டது. எனது உடம்புக்குள் பல போராட்டங்கள் நடந்தது.

அதுமட்டுமின்றி சர்க்கரை, உப்பு, பருப்பு வகைகள் கூட உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு மாத்திரைகள் மட்டுமே பல நேரங்களில் உணவாக்கப்பட்டது. அதே நேரத்தில் தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மேலும் பாதித்தது.

கடந்த ஓராண்டு கால பிரார்த்தனை பூஜைகள் எந்த ஒரு பரிசையும் எதிர்பார்த்து நான் கடவுளை பிரார்த்தனை செய்ததில்லை. மனவலிமைக்காகவும் அமைதிக்காகவும் தான் பிரார்த்தனை செய்தேன். சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியம் இல்லை. முன்னோக்கி நகர்வதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.

எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கடந்த ஆண்டில் நான் கற்றுக் கொண்டேன். ஒரு சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டும், மீதி உள்ளவற்றை விட்டுவிட வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன். கடந்த காலங்களில் நடந்த சோகங்கள், தோல்வியை நினைத்து அதில் மூழ்கி விடக்கூடாது.

நாம் நேசிப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும்.  உங்களில் பலர் கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள், உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் சில விஷயங்களை தாமதம் செய்யலாம். ஆனால் கைவிட மாட்டார் “ என்று சமந்தா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்