நடிகர் ஜெயம்ரவி – நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘இறைவன்‘. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பான் இந்தியா ரசிகர்களைக் கவர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவி தன் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை‘, ‘மனிதன்‘, ‘வாமணன்‘ மற்றும் ‘ஜனகனமன‘ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கி உள்ளார். மேலும் ‘தனி ஒருவன்‘ பட வெற்றிக்கு பிறகு ஜெயம்ரவி – நயன்தாரா வெற்றிக்கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் ஒன்றிணைகிறது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தை பேஷன் ஸ்டூடியோ சார்பில் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, ஜெயம்ரவி, நயன்தாராவுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குனர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார். படம் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம். மேலும் இயக்குனர் அஹமதுவின் முந்தைய படங்களைப் போல் இறைவன் படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இறைவன் படம் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன்“, என்று கூறியுள்ளார்.










