பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, குஷ்புவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “பெண்கள் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க என்னால் முடிந்ததைச் செய்வேன்” எனக் கூறினார்.
தேசிய மகளிர் ஆணையத்திற்கு தலைவர், ஒரு உறுப்பினர் செயலாளர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










