டி.எம்.சௌந்தர்ராஜன் பெயரில் சாலையை திறந்து வைத்த முதல்வர்…!

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை மந்தவெளி மேற்கு வட்ட சாலைக்கு ‘டி.எம்.சௌந்தர்ராஜன் சாலை‘ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு டி.எம்.சௌந்தர்ராஜன் மகன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் 1923-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி பிறந்தார். டிஎம்எஸ் என்று தமிழ் திரைப்பட பாடல் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் டி.எம்.சௌந்தர்ராஜன். தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்காக சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான  ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் டிஎம்எஸ் 91 வயதில்2013-ம் ஆண்டு மறைந்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்