சினிமா திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளவர் நடிகை ஹன்சிகா. இவர் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நிலையில் கடந்தாண்டு இறுதியில் தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது வரை பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், “ நான் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும்போது முழு படத்தையும் தனது தோளில் சுமக்க வேண்டிய பொறுப்பு இருக்கும்.
நான் அதற்கு தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. சினிமா துறையில் இருபது வருடங்களாக நான் நீடித்து இருப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன். பெருமையாகவும் உள்ளது. பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். சினிமா துறையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன்.
எனது சினிமா வாழ்க்கை பயணம் நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமின்றி ஆக்கப்பூர்வமான மற்றும் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது “ என்றார்.










