’வெண்ணிலா கபடிக்குழு’ என்ற படத்தில் நடித்த நடிகர் ‘மாயி’ உடல் நலக்குறைவால் இன்று (24.12.2022) அதிகாலை உயிர் இழந்தார். இவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர். மேலும், இவரின் உண்மையான பெயர் சுந்தர். இவர் ’மாயி’ படத்தில் நடித்ததன் மூலம் ‘மாயி சுந்தர்’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
மேலும் தமிழில் இவர் ’துள்ளாத மனமும் துள்ளும்’, ’குள்ளநரி கூட்டம்’, ’மிளகாய்’, ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ’கட்டா குஸ்தி’, ’கட்சிக்காரன்’ என 50-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர், தனது சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்சகாமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். இவரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நடக்கிறது.
இம்மாதம் துவக்கத்தில் தான் ’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைந்தார். இப்போது அதே படத்தில் நடித்த மற்றொரு நடிகரான ‘மாயி‘ சுந்தரும் மறைந்தார். கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனையால் இந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகரான நிதீஷ் வீராவும் மரணம் அடைந்தார்.
இப்படி ஒரே படத்தில் நடித்த மூன்று நடிகர்கள், ஒரே மாதத்தில் மறைந்தது திரையுலகினரை மட்டுமல்ல, ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.










