தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக உச்சக் கட்டத்தில் இருந்தவர் நடிகை மும்தாஜ். இவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்ட நக்மா கான் என்னும் இயற்பெயரை கொண்ட மும்தாஜுக்கு பள்ளி படிக்கும் போதே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது.
அவரது வீட்டின் அறை முழுவதும் நடிகை ஸ்ரீதேவியின் போஸ்டர்களே இடம் பெற்றிருக்கும். சினிமாவில் முயற்சித்த மும்தாஜுக்கு 1996-ம் ஆண்டு திலீப்குமாருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. இதனையடுத்து நடிப்பு பயிற்சி பெற்ற அவருக்கு சேத்தன் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சேத்தன் ஆனந்த் இறந்து விட்டதால் அந்தப் படமும் கைவிடப்பட்டது.
இதனையடுத்து டி.ராஜேந்தர் 1999-ம் ஆண்டு ‘மோனிசா என்ற மோனலிசா‘ படத்தை ஆரம்பித்தார். புதுமுகங்களை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் டி.ஆருக்கு தோன்ற உடனே மும்பை சென்று மும்தாஜை புக் செய்தார். எனவே தமிழ் படம் மூலம் மும்தாஜ் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ‘மோனிசா என் மோனாலிசா‘ படம் வெற்றியடையவில்லை.
மேலும் இப்படத்துக்கு பிறகு சத்யராஜ் நடித்த ‘மலபார் போலீஸ்‘ படத்தில் நடித்தார். அந்த படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. இப்படிபட்ட சூழலில் தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய அவர் மலையாளத்தில் ‘நான்சி பரேரா‘ படத்தில் நடித்தார்.
அதனையடுத்து தமிழில் ‘உனக்காக எல்லாம் உனக்காக‘ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். இப்படி 1999-ம் ஆண்டு அவருக்கு ஒரு போராட்ட ஆண்டாகவே அமைந்தது. சினிமாவில் நிலையான ஒரு இடத்துக்கு போராடிக்கொண்டிருந்த மும்தாஜுக்கு ‘குஷி‘ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மும்தாஜ் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், ‘கட்டுப்பிடி கட்டுப்பிடிடா‘ பாடலுக்கு விஜய்யுடன் அவர் போட்ட நடனத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களும் விழுந்துவிட்டனர். அதனையடுத்து தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஒரு பாடலுக்கு நடனமாடியும் பிஸியாகவே வலம் வந்தார் நடிகை மும்தாஜ். காலப்போக்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தமிழில் கடைசியாக லாரன்ஸுடன் ‘ராஜாதிராஜா‘ படத்தில் நடித்திருந்தார்.
மும்தாஜ் பீக்கில் இருந்தபோது அவருக்கு ரசிகர் மன்றமும் இருந்தது. மன்றத்தை சேர்ந்தவர்கள் கோயில் கட்டவும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதனை கேள்விப்பட்ட மும்தாஜ் அவர்களை அழைத்து ஒருவேளை உங்கள் தாய்க்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கடவுள் இருக்கும் கோயிலுக்கு சென்றால் கடவுள் ஏதாவது கொடுப்பார்.
ஆனால் எனக்கு கோயில் கட்டி என்னிடம் வந்து கேட்டால் மும்தாஜிடமிருந்து ஒன்னுமே இல்லை என்ற பதில்தான் வரும். ஏனென்றால் என் கையில் உண்மையிலேயே எதுவுமில்லை. அதனால் இதெல்லாம் கூடாது. கடவுளுக்கென்று தனி இடம் இருக்கிறது என அவரது ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.
இப்படி பக்குவமாக நடந்துக் கொண்ட நடிகை மும்தாஜ் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பொதுவாக சினிமாவிற்கும், கவர்ச்சி நடிகைகளுக்கும் நீண்ட பந்தம் உண்டு. அதிலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகளாவது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை மும்தாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.










