நாடு முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி விழா, கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெண்ணெய் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவசை அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடத்தப்படுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் அபிஷேகம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், இன்று (டிச.23) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர், புட்லூர் அருகே ஆஞ்சநேயர், திருத்தணி அருகே சோளிங்கர் உள்பட பல கோயில்களிலும், நகர் பகுதிகளி அமைந்துள்ள பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதையொட்டி, நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாற்றி, திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் வடை மாலையுடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய போலீசார் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இன்று ஒருநாள் மட்டும் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இன்று 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, நல்லெண்ணைய், 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வாசனைப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். பின்னர் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனை நடைபெறும்.










