தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால், சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைதேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்து நிராகரித்ததை அடுத்து, அதிரடியாக பேசி பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார் விஷால்.
அதன் பிறகு, ஆந்திரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த சிறிய காலங்களில் பல அதிரடி மாற்றங்களையும் நன்மைகளையும் மக்களுக்கு செய்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விஷால் போட்டியிடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தது. அதற்கு விஷால் ’’நான் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி வருகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டிசம்பர் 22-ம் தேதி இவருடைய படம் ’லத்தி’ திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருகிற டிசம்பர் 27-ம் தேதி தன்னை வந்து சந்திக்குமாறு விஷாலுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக செய்திகள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.
இந்நிகழ்வு, தமிழக அரசியலில் இறங்க வேண்டும் என்று அவ்வப்போது தீவிர ஆர்வம் காட்டி வரும் விஷால், ஆந்திர அரசியல் களத்தில் குதிக்க போகிறாரா? என்ற கேள்விகளையும் எழுப்பிக்கொண்டு இருக்கிறது.










