ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘கஜினி‘. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ஆமீர்கான் நடிப்பில் இந்த படத்தை ரீமேக் செய்து இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஹிந்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலையும் அள்ளி குவித்தது. ஹிந்தியில் இந்த படத்தை வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த படத்தை இந்தியா முழுவதும் வாங்கி வெளியிட்டு லாபம் பார்த்தவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான அல்லு அரவிந்த்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஹிந்தியில் ஆமீர்கானை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க போவதாக சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அல்லு அரவிந்த், இப்படி வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போதும், எப்போதும் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அது மட்டுமல்ல இந்த செய்தியை கேள்விப்பட்டு அமீர்கானின் நட்பு வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின்படி லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு ரீமேக் படங்களில் நடிக்கும் எண்ணத்தையே அமீர்கான் கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.










