ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அதானி குறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இது குறித்து விசாரிக்க குழு அமைக்கவும், குழு உறுப்பினர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, குழு உறுப்பினர்களின் பெயர்களை சீலிடப்பட்ட உரையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், உச்சநீதிமன்றமே உறுப்பினர்களை முடிவு செய்யும் எனக் கூறி, வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வை அணுகிய மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், மாண்பையும் விமர்சிக்கக் கூடிய வகையில் உள்ள ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அத்துடன், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.










