ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 23-ம் தேதி ரயில் செல்லும்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ராமேசுவரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தோடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த தொழில்நுட்ப கோளாறை சீர் செய்வதற்காக தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் பி.கே.குப்தா மற்றும் தெற்கு ரயில்வே பாலங்களின் தலைமை பொறியாளர் சுமித் சின்ஹால் உள்ளிட்ட அதிகாரிகள் 24.12.2022 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தூக்கு பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக்கு பின்னர், தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி உடனடியாக தொடங்கின. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும், என தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கடந்த 2 நாட்களாக சென்னை செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டன. அதேபோல் மதுரை, திருச்சி, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து, ராமேஸ்வரம் வரவேண்டிய ரயில்களும், மண்டம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர் செல்ல வேண்டியவர்கள், வெளியூரில் இருந்து இராமேஸ்வரம் வர வேண்டியவர்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டிருந்தாலும், இது தவிர்க்க முடியாதது ஆகும்.








It is really good