தமிழில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பசுபதி. இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் இடையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தின் மூலம் மீண்டும் ரி-என்ட்ரீ கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ‘தங்கலான்‘ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ‘தண்டட்டி‘ என்னும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இதில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை ராம் சங்கையா டைரக்டு செய்துள்ளார். லட்சுமண் குமார் தயாரித்துள்ளார். இதில் மூதாட்டிகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை பற்றி நடிகர் பசுபதி கூறியதாவது, “ சார்பட்டா பரம்பரை படம் முடிந்ததும் ‘தண்டட்டி‘ கதையை கேட்டேன். எனக்கு பிடித்து இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. நல்ல படத்திற்கான எல்லா தகுதியும் இந்த படத்துக்கு இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.










