மீண்டும் கதாநாயகியான பிரபல நடிகை

தமிழில் ‘வாகை சூடவா, மௌன குரு‘ படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை இனியா. தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இரண்டாவது நாயகி அல்லது சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக ‘ரைட்டர்‘ படத்தில் சமுத்திரகனி மனைவியாக நடித்திருந்தார். மேலும் ‘ஆதார்‘ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது கதாநாயகியாக ‘சீரன்‘ என்னும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதில் இவருடன் இணைந்து சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், அருந்ததி உள்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் ஜேம்ஸ் கார்த்திக் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை துரை.கே.முருகன் இயக்குகிறார்.  படத்தை தயாரித்து நாயகனாகவும் நடிக்கும் ஜேம்ஸ் கார்த்திக் இப்படத்தை பற்றி கூறியதாவது, “ செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. என் பெற்றோர் கலப்பு திருமணம் செய்ததால் எதிர்ப்புகளை சந்தித்தனர். ஊர்மக்களின் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். என் தாயார் கஷ்டப்பட்டு என்னை வளர்த்துப் படிக்க வைத்தார்.

இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். சிங்கப்பூரில் தொழில் செய்கிறேன். என் பெற்றோர் மற்றும் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. ஊர் மக்கள் வெறுப்பை மறந்து எங்களை ஏற்றுக்கொண்டார்களா? என்பது கதை“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்