“மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்”- உச்சநீதிமன்றம் கருத்து!

மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், ஆளுநரின் கேள்விக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு மாநில முதலமைச்சருக்கு உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வரும் மார்ச் 3-ம் தேதி பஞ்சாப் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு அனுமதி வழங்கிடுமாறு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் சட்ட ஆலோசனை பெற்ற பிறகே அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில முதலமைச்சரின் அலுவலகம் கூறியிருந்தது.

இதனால் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சட்டமன்றத்தைக் கூட்ட அனுமதி மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி பஞ்சாப் அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க விடுத்த கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றில் ஆளுநர் அரசியலமைப்பின் கீழ் உள்ளவர் என்றும், மாநில அமைச்சரவையின் பரிந்துரை படி, செயல்படும் நபர் என்றும் கூறியிருந்தது சுட்டிக்காட்டப்பட்டது.

ஏதேனும் ஒரு விவகாரத்தில் ஆளுநர் உரிய விளக்கம் கேட்டால், அதை அளிக்கக் கூடிய கடமை மாநிலத்தின் முதலமைச்சருக்கு உள்ளது என்றும், ஆனால் அதை விடுத்து ஆளுநர் கேள்வி எழுப்பினால் அதை பொதுவெளியில் விமர்சனம் செய்வது விரும்பத்தகாதது எனவும் தெரிவித்தனர்.

இந்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அனைத்து மாநில அரசுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்