சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் புதிய படத்தில் மணிகண்டன் மற்றும் சான்வே மேகனா நடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன், தனம், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் இணைந்து நடிக்கின்றனர். மணிகண்டன் சமீபத்தில் வெளியான ‘குட் நைட்‘ திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இந்த படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானதிற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும்.
இந்த திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. படத்தின் கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.










