இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு‘. இதில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ள நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் அன்றைய சினிமா சூழலில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றது. மேலும் இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் இப்படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது. நேற்று முன்தினம் இப்படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ‘வேட்டையாடு விளையாடு‘ இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் கமலிடம் கூறியுள்ளேன், அவருக்கு பிடித்திருந்தது. ‘துருவ நட்சத்திரம்‘ வெளியீட்டுக்குப் பின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் பணிகளை துவங்க திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
