தமிழ் திரையுலகில் ‘மொழி, நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே, அற்புத தீவு‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர். நடிகர் பிரித்விராஜ் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த ‘லூசிபர்‘ என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ் அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலும் அவரும் இணைந்து நடித்த ‘ப்ரோ டாடி‘ என்கிற படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அதே சமயம் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிஸியான வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ‘கேஜிஎப்‘ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்‘ படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பிரித்விராஜிடம் தனக்காக ஒரு படம் இயக்க முடியுமா, கதை இருக்கிறதா என பிரபாஸ் கேட்டபோது அசத்தலான கதை ஒன்றை கூறி பிரபாஸை ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ். அடுத்ததாக மோகன்லாலை வைத்து ‘லுசிபர்‘ படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார். அந்த வகையில் பிரித்விராஜ் மற்றும் பிரபாஸ் தங்களது அடுத்தடுத்த படங்களை முடித்துவிட்டு புதிய படத்திற்காக இணைய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
