காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைவுக்கு பிறகு காலியாக இருக்க கூடிய ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இதனால், இந்த இடைத்தேர்தல் விவகாரம் தற்போதைய நிலையிலேயே சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது.
இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து, அண்மையில் விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் என்று சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
நீண்ட காலம் பாஜகவில் பயணம் செய்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து விலகிய நிமிடத்தில் இருந்தே, பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையை குறிவைத்து, விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அவரின் தற்போதைய கருத்து, அவர் வேறு ஏதாவது கட்சியில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரா என்கிற கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
