பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் ஒருசில வாரங்கள் மட்டுமே வெளிநாடுகளிடம் இருந்து உணவு, தானியங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்ய முடியும். அதற்குள், சர்வதேச அமைப்புகள், வெளிநாடுகளிடம் இருந்து பெரும் தொகையை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கடனாக பெற்றே ஆகவேண்டும். அண்டை நாடுகள் பல்வேறு விதங்களில் பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இவை தவறினால், பாகிஸ்தான் திவாலாகி விடும் எனத் தெரிவிக்கின்றனர் சர்வதேச பொருளாதார நிபுணர்கள்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான், பாகிஸ்தானில் ஒரு நகரில் கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை நூற்றுக்கணக்கான மக்கள் மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வலம் வருகின்றன. மக்கள் கூட்டம் துரத்துவதால் என்ன செய்வதென அறியாத ஊழியர்கள், மக்களிடம் இருக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு கோதுமை மூட்டைகளை கொடுப்பதை பார்க்க முடிகிறது. ஆக, பாகிஸ்தான் மக்கள் பணம் இருந்தும் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகிறார்கள் என்பதை தெளிவாகவே உணர்த்துகிறது.
ஏற்கெனவே, பாகிஸ்தானில் ஏற்பட்டு இருக்க கூடிய பொருளாதர நெருக்கடியால் உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை விண்ணை தொட்டுவிட்டது. குறிப்பாக, கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட், ரூ.3200-க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ. 175, ஒரு கிலோ வெங்காயம் ரூ.300 , ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.900, என்கிற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. சமையல் காஸ் சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
வரக்கூடிய சில தினங்களில் பாகிஸ்தான் என்னாகப் போகிறது என்பது தெளிவாகவே தெரிந்துவிடும்.
