இலங்கையில் சீனா பல்வேறு விதங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, இந்தியாவும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில்தான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், இந்தியாவின் அதிநவீன ஏவுகணை பொருத்தப்பட்ட போர்க்கப்பலும் இலங்கை விரைந்திருக்கிறது.
அதாவது, இந்திய கடற்படையின் 163.2 மீட்டர் நீளம் கொண்ட ஐ.என்.எஸ் டெல்லி கப்பல், இலங்கையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகம் சென்றடைந்து இருக்கிறது. இரண்டு நாட்கள் அலுவல் பயணமாக வந்த இந்திய கடற்படை கப்பலுக்கு இலங்கை அதிகாரிகள் வரவேற்பு கொடுத்திருக்கின்றனர்.
சுமார் 400 பணியாளர்களுடன் இலங்கை துறைமுகத்தில் இந்தக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி மற்றும் 20-ம் தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்க கூடிய நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் இலங்கை சென்றுள்ளது பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
இந்தியா – இலங்கை இடையேயான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை வீரர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்படை சவால்களை சமாளிக்கும் வகையில் இதுபோன்ற கடற்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதை தாண்டி, இந்தியாவின் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
