தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் வசந்த் ரவி. இவர் ‘தரமணி, ராக்கி‘ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் இவர் நடிப்பில் ‘அஸ்வின்ஸ்‘ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் – ஹாரர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான தருண் தேஜா இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்துள்ளது. இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரம் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, “ வளர்ந்து வரும் நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது.
இதற்கு காரணமாக இருந்த என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாபி சார் தமிழில் இனி பெரிய படங்கள் தயாரிப்பார். அதற்கு ‘அஸ்வின்ஸ்‘ முதல் படமாக இருக்கும் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
தருண் ஒரு எனர்ஜியான இயக்குனர். ‘ராக்கி‘ அருண் எப்படி இப்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்‘ படத்தை இயக்குகிறாரோ அதுபோல தருணுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தியேட்டர் விசிட் போனபோது, பார்வையாளர்கள் கொடுத்த வரவேற்பு அவ்வளவு எமோஷனலாக இருந்தது. இதுபோல, ரிப்பீட் ஆடியன்ஸ் சமீப காலத்தில் எந்தவொரு படத்திற்கும் வரவில்லை. இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் “ என்று கூறியுள்ளார்.
