தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது தனது 32-வது படமான ‘ஜீனி‘ படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் உதவியாளரான அர்ஜுனன் இயக்குகிறார்.
இப்படத்தை ‘எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு‘ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கிர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிக்கா கபி ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடிக்கிறார்.
இந்த நடிகைகள் 3 பேருமே ஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். நடிகை கல்யாணி இதற்கு முன்பு தமிழில், ‘ஹீரோ, மாநாடு‘ ஆகிய படங்களிலும், கிர்த்தி ஷெட்டி, ‘த வாரியர், கஸ்டடி‘ ஆகிய படங்களிலும், வாமிக்கா கபி ‘மாலை நேரத்து மயக்கம்‘ படத்திலும் நடித்துள்ளார்கள்.
ஒரு ஹீரோவின் படத்தில் மூன்று கதாநாயகிகள் என இன்று(ஜூலை.5) நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். மேலும் சிலர் ஜெயம் ரவியைப் பார்த்து பொறாமை அடைந்துள்ளனர். விழாவில் பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
