தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகனாக திரையுலகில் என்ட்ரீ கொடுத்தவர் நடிகர் ராம்சரண். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘மகதீரா‘ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சினிமா உலகில் தனக்கென்று தனிஇடத்தை பிடித்தார்.
மேலும் கடந்தாண்டு மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வெளியான ‘ஆர்ஆர்ஆர்‘ படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனால் இவருக்கு பல தேசிய விருதுகளும் குவிந்தது. நடிகர் ராம்சரண் தற்போது தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் தன்னை செதுக்கி கொண்டுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம் சரண் அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். ஒருவருக்கொருவர் புரிதல் கொண்ட தம்பதிகளாக இவர்கள் இணைபிரியாமல் வலம் வந்தாலும், கடந்த பத்து வருடங்களாக இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையே என குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உபாசனா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான தகவலை தம்பதியினர் வெளியுலகுக்கு தெரியப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று பிரசவத்திற்காக ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் உபாசனா.
இதைத்தொடர்ந்து அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என ராம்சரண் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதியினருக்கு திரையுலகில் இருந்தும், உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
