நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், பிரபல நடிகருமான பிரபு தமிழ் ரசிகர்களால் அன்போடு ‘இளைய திலகம்‘ என்று அழைக்கப்படுவர். தனது வெள்ளந்தியான சிரிப்பாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் தற்போது ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் பிரபு (பிப்ரவரி 20) சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பின் பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டார தகவலில் தெரியவந்துள்ளது.
