சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், “நியாயம், நீதி எங்கள் பக்கம் இருக்கிறது. பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்பது யார் அதை கூட்டினார்கள் என்பதைப் பொருத்தது” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., “அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் எதுவும் கூறவில்லை. பொதுக்குழு செல்லும் என்பதைத் தவிர ஒரு அடி கூட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முன்னேற்றமில்லை” என்றார்.
வைத்திலிங்கம் பேசுகையில், “உச்சநீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளதாகக் கருதுகிறோம்” என்றார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தங்களுக்கு எந்த விதமான பின்னடைவும் இல்லை. நாங்கள் ஏன் தனிக்கட்சித் தொடங்க வேண்டும்?; மக்களிடம் சென்று நீதி கேட்போம். அ.தி.மு.க. ஈ.பி.எஸ். தாத்தாவோ, ஓ.பி.எஸ். தாத்தாவோ ஆரம்பித்த கட்சி அல்ல; எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி.
நாங்கள் யாருடைய ‘பி’ டீமும் இல்லை; தி.மு.க.வின் A to Z டீம் அவர்கள்தான். இரண்டாவது தர்மயுத்தத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் எங்கள் தொண்டர்கள் மேலும் எழுச்சி அடைந்துள்ளனர். சசிகலா உள்ளிட்டோரை விரைவில் சந்திப்போம்” எனக் கூறியுள்ளார்.
