உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் அந்நாட்டின் நேரப்படி பிப்ரவரி 24-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனினும், உக்ரைன் மீதான போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ள உக்ரைன் முயன்றது. அப்படி உக்ரைன் இணைந்துவிட்டால், சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது தலைநகர் மாஸ்கோ, நேட்டோ நாடுகளின் இலக்குகளுக்கு இரையாகும் என ரஷ்யா அஞ்சியது.
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், தனது பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்பதாலேயே, தாக்குதலை கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பகிரங்கமாகத் தொடங்கியது ரஷ்யா. மறுபுறத்தில், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்ற புதிய செய்தியை அமெரிக்காவுக்கு சொல்லவுமே, வெகு தைரியமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது.
1990- களில் ரஷ்யா துண்டுத்துண்டாக உடைந்த போது, பிரிந்த ஒரு பெரிய நாடு தான் உக்ரைன். ரஷ்யர்கள் அதிகம் வாழும் உக்ரைனில் இன்று வரைக்கும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே பார்த்து வருகிறது ரஷ்யா. இதனாலேயே, கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனுடன் இருந்த கிரிமியா ராணுவ நடவடிக்கை மூலம், இணைத்துக் கொண்டது ரஷ்யா.
எஞ்சியுள்ள பகுதிகளையும் ரஷ்யா அடாவடி தனமாக பறித்துக் கொள்ளக் கூடாது என்பதால், நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்று பார்வையிட்டு, நிலைமை குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்டறிந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
