தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இயக்குனராக இருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள், கர்ணன்‘ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படமாக தற்போது ‘மாமன்னன்‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரின் படங்கள் அனைத்தும் சாதி வேற்றுமை கொடுமைகளை கொண்டதாக இருக்கும். இந்நிலையில் ‘பரியேறும் பெருமாள்‘ படத்தில் நடித்த எதிர்நீச்சல் தொடர் புகழ் பெற்ற மாரிமுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ பரியேறும் பெருமாள் படத்தில், கதாநாயகன் கதிரை கதாநாயகியின் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து அடித்து கதிர் மீது சிறுநீர் கழிப்பது போல் காட்சி இருக்கும். அதன் படப்பிடிப்பு தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள கருங்குளம் என்ற ஊரில் தான் எடுக்கப்பட்டது. அந்த காட்சியை எடுக்கும்போது இயக்குனர் ஒரு மிருகம் போல இருந்தார். இயக்குனர் இருந்த கோபத்தை பார்த்து, ஏன் சார் இவ்ளோ கோவம் என கேட்டபோது அவர் கூறியது எனக்கு அதிர்ச்சி அளித்தது.
அவர் இது என் வாழ்வில் நிஜமாகவே நடந்த சம்பவம் என கூறினார். அப்போது தான் எனக்கு புரிந்தது மாரி செல்வராஜ் தனது காதலியின் வீட்டுக்கு சென்றபோது இப்படி அவமானப்பட்டு இருக்கிறார் என்று புரிந்துக்கொண்டேன். அதன் பின் இந்த காட்சியை நான் சிறப்பாக நடித்து முடித்தேன் “ என கூறியுள்ளார்.
