டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். பதவி விலகுவது நாடகம் என்றும், அவரை பிரபலப்படுத்தி கொள்வதற்காகவே வாக்கெடுப்பு நடத்தியதாகவும் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
‘டுவிட்டர்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவது குறித்து, எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில், அவர் பதவி விலக வேண்டும் என பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தொடர்ந்து வகிக்க வேண்டும் அல்லது வேண்டாமா என்பது குறித்து புதிய தலைவரான எலான் மஸ்க், டுவிட்டர் பக்கத்தில், தன்னை பின்பற்றும் 12.2 கோடி பேரிடம்,கருத்து கேட்டார். தொடர்ந்து அதற்கான வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அதில், எலான் மஸ்க், தலைவர் பொறுப்பில் இருந்து விலகலாம் என 57.5 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஆனால், வாக்கெடுப்புக்கு பின்னர், தன்னுடைய முடிவு குறித்து எலான் மஸ்க் எதுவும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் பயனாளி ஒருவர் ‘டுவிட்டரில் சந்தா செலுத்தி ‘புளூடிக்’ பெற்றவர்கள் தான், நிறுவனத்தின் கொள்கை சார்ந்த முடிவுகளில் வாக்களிக்க முடியும்’ என பதிவு செய்ார். அந்த பதிவுக்கு, ‘நல்ல கருத்து இது. டுவிட்டர் இந்த மாற்றத்தை மேற்கொள்ளும்’ என தெரிவித்துள்ளார். ஆனால், பதவி விலகுவது குறித்து நேரடியாக எந்த எலான் மஸ்க் எந்த பதிலையும் கூறவில்லை.
எலான் மஸ்க் பதவி விலகுவதற்கு போலி கணக்குகள் வாயிலாக பலர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். எனவே, உறுதியான கணக்கை கொண்ட புளூடிக் சந்தாதாரர்களின் வாக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என, எலான் மஸ்க் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் எதிர்த்தரப்பினர் எலான் மஸ்க், டிரம்ப் இருவருமே டுவிட்டரை பயன்படுத்தி, தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதாகவும்; எப்போதும் பேச்சு பொருளாக அவர்கள் இருக்க, டுவீட்டுகளை பயன்படுத்துகின்றனர் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிலர், ‘டெஸ்லா நிறுவன பங்குகளை விற்கலாமா, டிரம்பை மீண்டும் சேர்க்கலாமா’ என்பது உள்பட பல்வேறு வாக்கெடுப்புகள் நடத்தி, எலான் மஸ்க், தன்னை பின்பற்றும் கோடிக்கணக்கானோரை பயன்படுத்தி, பிரபலமடைகிறார் என குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
