குத்து சண்டை போட்டியை துவக்கி வைக்க சென்ற நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, திடீரென அவரும் குத்து சண்டையில் இறங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசில், நடிகை ரோஜா, சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அந்த நிகழ்ச்சியில் ஒருவராக பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த தேர்தலின்போது, பிரச்சாரத்துக்கு சென்ற அவர், ஒரு கிராமத்தில் கபடி விளையாடி இளைஞர்களுடன் சேர்ந்து, கபடி ஆடி, வாக்கு சேகரித்தார். அதேபோல் கோயில் திருவிழாவில் நடந்த கலாச்சார நடனத்திலும், கலைஞர்களுடன் நடமனமாடினார்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க அமைச்சர் ரோஜாவுக்கு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற அவர், அங்கிருந்த ஒரு வீரரிடம் இருந்து கை கிளவுசை வாங்கி அணிந்து கொண்டு, வீரர்களுடன் குத்துச்சண்டை போட தொடங்கினார். இதை பார்த்ததும், அங்கிருந்த பார்வையாளர்கள் ரோஜாவை உற்சாகப்படுத்தினர்.
