தமிழ் சினிமாவில் புதுமையை விரும்பும் இயக்குனர் பார்த்திபன். எப்போதும் எதை யோசித்தாலும் அதில் புதுமையை புகுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதில் இவர் வல்லவர். கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன். நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த பார்த்திபன் இயக்குனராக மாறினார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு‘ திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது.
பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு சென்னை புத்தக கண்காட்சியில், சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார். அவரது இந்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், பார்த்திபன் தான் இறந்து விட்டதாக வதந்தி வெளியிட்ட யூடியுப் சேனலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘‘நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! நெகட்டிவிட்டிய பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கு பரப்புவோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘இரவின் நிழல்‘ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ’52-ம் பக்கத்தில் ஒரு மயிலிறகு‘ என்ற திரைப்படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
