இயக்குனர் இரா.கோ. யோகேந்திரன் இயக்கத்தில், விஜய் டிவி பிரபலமான ரக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்‘. இதில் இவருடன் இணைந்து மலினா, தீனா, பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்துள்ளார். பள்ளி கால நினைவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ.யோகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை இதுவரை இப்படி நடைபெறாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது. அதாவது, ‘மறக்குமா நெஞ்சம்‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களுடன் படித்த சகமாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் பணியாற்றியவர்களின் நண்பர்கள் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் மேடை ஏறி, பாடலை வெளியிட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர்.
இந்த விருது நன்றிக் கடன் விருது என அழைக்கப்படுகிறது. நன்றிக் கடன் விருது என்று அறிவித்து, “ விதைத்துக் கொண்டே இருங்கள், முளைத்துக் கொண்டே இருக்கிறோம் – நன்றி‘ என்று எழுதப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை என கூறி இதற்கு ஏற்பாடு செய்த படக்குழுவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.
