மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அணி 6 ஆவது முறையாக கைப்பற்றியது.
மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்து வந்தது. இதில், கேப்டவுனில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதின. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது.
வீராங்கனை மூனி (Mooney) 53 பந்துகளில் 74 ரன்களை எடுத்து அசத்தினார். அடுத்து 157 ரன்களை எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணியின் வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் திணறினர்.
20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே தென்னாப்பிரிக்கா அணி எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, உலகக்கோப்பையை 6-வது முறையாக வென்றது. இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
